Kootaanchoru
Author : Suyambulingam
கூட்டாஞ்சோறு
எழுதியவர்: சுயம்புலிங்கம்
Author : Suyambulingam
எழுதியவர்: சுயம்புலிங்கம்
கண்மணி ஆறாம் வகுப்பில் படித்து வந்தாள். அன்றைய தினம் இரவு ஏழு மணியளவில், தாத்தாவுடன் சிரித்தபடி பேசி, பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள், அவளுடைய பாட்டி அன்றைய இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார் —"கூட்டாஞ்சோறு", பல்வேறு காய்கறிகள், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து தயாரிக்கப்படும் சுவையான உணவு.
சிறிது நேரத்தில், கண்மணியின் அப்பா, அம்மா இருவரும் வேலை முடித்து வீடு திரும்பினர். முகம், கை, கால்களை கழுவி புத்துணர்ச்சியடைந்தனர். கண்மணி பாட்டியிடம்,
"பாட்டி, எனக்கு மிகவும் பசிக்கிறது, எப்பொழுது சாப்பிடலாம்?" என்று கேட்டாள்.
அதற்கு பாட்டி, "எல்லாம் தயாராகிவிட்டது, சாப்பிட வேண்டியதுதான் என்றார் ," என்றார்.
அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே, மிகவும் பசியோடு வந்திருந்த அவளது தந்தை கேசவன், "இப்படி நேரத்தில் மின்சாரம் போய்விட்டதே!" என்று வருந்தினார். அதற்கு பாட்டி, "அதற்கு கவலைப்படாதே. இன்று நாமெல்லாம் நிலாச்சோறு சாப்பிடப் போகிறோம்!" என்றார்.
ஆர்வம் மிகுதியால் கண்மணி, "அது என்ன பாட்டி? நிலாச்சோறு? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை!" என்றாள். அவளது தந்தை, "வா! நம்ம வீட்டின் மொட்டையடிக்குச் செல்லலாம். இன்று பௌர்ணமி," என்றார். பாய் மற்றும் உணவுப் பண்டங்களை எடுத்துக் கொண்டு, அனைவரும் மொட்டையடிக்கு சென்றனர்.
அன்று முழு பௌர்ணமி என்பதால் நிலவின் வெளிச்சம் மொட்டையடியில் பிரகாசமாகப் பரவியிருந்தது. அந்த நிலா வெளிச்சம், அவர்கள் உணவு அருந்துவதற்கு போதுமானதாக இருந்தது. மெல்லிய தென்றல் காற்று அவர்களை தழுவிக் கொண்டிருந்தது. தாத்தா, மாடித் தோட்டத்தில் இருந்த இரண்டு வாழை இலைகளை வெட்டி, ஒவ்வொரு தட்டிலும் அழகாகப் போட்டார். பாட்டி, கூட்டாஞ்சோறை பரிமாறி, ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டே அன்றைய தினம் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்தனர். கண்மணியும் பள்ளியில் நடந்த சில நகைச்சுவையான நிகழ்வுகளைச் சொன்னாள். அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
சிறிது நேரத்தில் மின்சாரம் திரும்ப வந்தது. வழக்கம் போல, அனைவரும் தங்களது தொலைபேசிகளில் மூழ்கினர். ஆனால் அந்த இரவு, கண்மணி அந்த நிலாச்சோறு அனுபவத்தை நினைத்து மகிழ்ந்தபடியே, அடுத்த பௌர்ணமியை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.